டெல்லி:மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்ததாக அதன் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் ஆகியோர் மீது யூரி ரெட்டி அளித்த புகாரின் பேரில் ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் தொடர்பான சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. எனவே ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்ய உரிமை உள்ளதா? மேலும் எவ்வாறு அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், யூரி ரெட்டி ஆந்திர சிஐடியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மார்கதர்சி சிட் பண்ட் பங்குகள் பரிமாற்றம் செய்வதற்குக் கையெழுத்துப் போட்டுள்ளார். அச்சுறுத்தலின் கீழ் கையெழுத்துப் போடவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என ஆந்திர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மார்கதர்சி மீதான வழக்குப் பதிவு விவகாரத்தில் ஆந்திர சிஐடியின் அதிகார வரம்பு குறித்தும் கேள்வி எழுப்பியது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனம் மீதான அனைத்து தரப்பு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை 8 வாரத்திற்கு நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யூரி ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்எல்பி(SLP) வழக்கு தாக்கல் செய்தார். இதில், "ஆந்திர உயர் நீதிமன்றம் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்த வழக்கு விசாரணையை ஆந்திர சிஐடி விசாரணை செய்வதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதனை ரத்து செய்து நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்க உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார்.