டெல்லி : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் 370 சட்டப்பிரிவை நீக்க சாத்தியமா என்று கேள்வி எழுப்பியது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையானது, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நாள்தோறும் நடத்தப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் மூலமாகவே நீக்கப்பட்டதாகவும் அரசியலமைப்பு நடைமுறையின் கீழ் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.