டெல்லி:அரசு அலுவலர்களாக பணிப்புரியும் பட்டியல் சமூகம் (SC), பழங்குடிகள் (ST) உள்ளிட்டோருக்கு பணி உயர்வு அளிப்பதில் இடஒதுக்கீடு வழங்கும் விவாகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஜன. 28) தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், சஞ்சிவ் கண்ணா, பிஆர் காவை ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்,"பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் (SC & ST) சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு மாநில அரசுகள் அதுசார்ந்த அளவீட்டுத் தரவுகளை சேகரிக்க வேண்டும். அரசியல் சாசன அமர்வு முடிவெடுத்த பின்னர், இந்த விஷயத்தில் புதிய அளவுக்கோலை உச்ச நீதிமன்றம் வழங்க முடியாது.
மாநில அரசுகள் கையில்தான் முடிவு
பட்டியலினத்தவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க மாட்டோம். அதை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பதை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும்
பட்டியலின அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வில் உள்ள பிரதிநிதித்துவ குறைப்பாட்டை போக்கும் வகையிலான காரணிகள் குறித்து மாநில அரசுகள்தான் மதிப்பிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.