தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் - டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! - உச்ச நீதிமன்றம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Wrestlers protest
Wrestlers protest

By

Published : Apr 25, 2023, 2:27 PM IST

டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெண் மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோரால் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக கூறி கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீரர், வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக புகார் தெரிவித்த காரணத்திற்காக தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வீரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அளித்த குற்றச்சாட்டு தீவிரத்தன்மை நிறைந்தது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த மனுவுக்கு டெல்லி போலீசார் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதேநேரம் மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் குறித்து வெளியே தெரிய வராத வகையில், நீதித் துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சிங் தொடர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை நடக்க இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

இதையும் படிங்க :Kochi Water Metro : நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details