டெல்லி:டெல்லி ஜஹாங்கிர்புரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று (ஏப்ரல் 20) காலை தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடக்கு டெல்லி மாநகராட்சி டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
அதன் அடிப்படையில் ஜஹாங்கிர்புரியில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணைக் காவல் ஆணையர் உஷா ரங்னானி மற்றும் உயர் அலுவலர்கள் அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20) காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியபோது, உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு தடைவிதித்து, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
23 பேர் கைது: முன்னதாக, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ்குப்தா, வடக்கு டெல்லி மாநகராட்சி மேயருக்கு எழுதிய கடிதத்தில், வன்முறை ஏற்பட்ட ஜஹாங்கிர்புரி பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றம் வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து இன்று மற்றும் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறயிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி நடத்த ஊர்வலத்தில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதில் 8 காவல்துறையினர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 சிறார்கள் உள்பட 23 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், நேற்று(ஏப்ரல் 19) இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருத்தப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜஹாங்கீர்புரி வன்முறை; முக்கிய குற்றவாளி பாஜக பிரமுகர்!