டெல்லி:சிறப்புத் திருமணச் சட்டம் 1954இன் கீழ், LGBTQIA சமூகத்தினர் திருமண உரிமை கோரிய மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி உள்ளது. இதனை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிருஷ்ணன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோலி மற்றும் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.
இதன்படி, தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கில் 4 தீர்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன என அவர் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தினால் சட்டத்தை உருவாக்க முடியாது. அதேநேரத்தில், சட்டத்தின் சரத்துகளை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு பிரமாண பத்திரம்:இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகரிப்பது என்பது, நகர்ப்புற மேல்தட்டு நாகரிகமாகும்.
மேலும் 'தன்பாலின ஈர்ப்பாளர்களின்’ திருமணங்களை ஆதரிப்பதன் மூலம், புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. இதனை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இது போன்ற திருமணங்களை அங்கீகரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்கள் முடிவு செய்வார்கள். தனி நபரின் உரிமையில் தன்பாலின ஈர்ப்பார்களின் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை.
தற்போது உள்ள திருமணச் சட்டம் என்பது அனைத்து மதத்தின்படியும், பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலனையும் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தது.
ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
நீதிபதிகளின் தீர்ப்புகள்:தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பது நகர்ப்புற மேல்தட்டு மக்களின் தேர்வு மட்டும் அல்ல. அவ்வாறு கூறுவது அவர்களை அழிப்பதற்கு சமமாகும். திருமணத்தை நிலையான, மாறாத அமைப்பு என்று கூறுவது தவறானது. சட்டங்களால் திருமணத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்திலிருந்து அரசு விலகுவது என்பது பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும்.
இந்த மனுக்கள் திருமணச் சட்டத்தின் பிரிவு 4-ஐ உள்ளடக்கியதாக இருப்பதால், இது அரசியலமைப்புக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் கருதினால், ஒன்று அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அதனை ஆய்வு செய்ய வேண்டும்.
ஒருவேளை சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு அழைத்துச் செல்லும். மாறாக, இதனை ஆய்வு செய்வது நாடாளுமன்றத்தின் வேலையைச் செய்வதாக அமைந்து விடும். எனவே, சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
ஒருவர் தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையும் அடங்கும். அதை அங்கீகரிக்கத் தவறினால், அவர்களுக்கு எதிராக பாகுபாடு ஏற்படும். அவர்களுக்கான உரிமைகள் குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருக்கிறார். மேலும், அவர்களின் உறவில் அவர்கள் சுதந்திரமாக இருக்க அங்கீகாரம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை, இது அங்கீகரிக்கப்படவில்லை என்றால், மறைமுகமாக அரசு அவர்களின் சுதந்திரத்தை மீறலாம்.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது, சுதந்திரமாக வாழ்தலுக்கான அரசியலமைப்பு பிரிவு 21-இன் கீழ் வருகிறது. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்பட அனைவரும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதிபடுத்துகிறது.
பிற பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், தன்பாலின ஈர்ப்பாளர் தம்பதிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என்றாலும், சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்படுகிறது!