டெல்லி: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நிதிஷ்குமார் அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
பீகார் மாநிலத்தில் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதிப்பிரிவு, சாதி உட்பிரிவு, பொருளாதார நிலை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதனிடையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக்கோரி சமூக அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி, பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Bihar: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இதுபோன்ற கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.