டெல்லி:பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப் போன்ற பொருட்களில் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்க்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மீண்டும் தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரனையின்போது, தமிழ்நாடு -புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை முடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டு வரும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தை (EPR) பெற முடியாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கொடிகள், ஹோட்டலில் உணவு கட்ட பயன்படும் தாள், பேக்கிங் டப்பாக்கள் உள்ளிட்டவை இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.