டெல்லி: மராட்டிய மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு, 16 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மராத்தா சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்! - Supreme Court cancels Maratha quota in Maharashtra
மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே, 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உச்சவரம்பை எட்டியுள்ள நிலையில், கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின்படி, சமூக பொருளாதார பின் தங்கிய பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது எனவும், மாநில அரசுகள் அடையாளம் கண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.