டெல்லி : சாலை பாதுகாப்பு சட்டம் சமூக நோக்கத்தின் சமநிலையை கொண்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர், குறிப்பிட்ட எடையிலான வாகனத்தை ஓட்ட அனுமதிக்கப்பட்டவரா என்ற மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சாலை பாதுகாப்பு என்பது சமுதாய இலக்கின் சமநிலையை ஒத்ததாக இருக்க வேண்டும் என்றும் சமூக கொள்கைக்கு அரசியல் சாசன அமர்வில் தீர்வு காண முடியாது என்று கூறினர்.
மேலும், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சாலை பாதுகாப்பு என்பது சட்டத்தின் பிரச்சினை மட்டுமல்ல, சட்டத்தின் சமூக தாக்கமும் கூட என்றும் சாலைப் பாதுகாப்பு என்பது சட்டத்தின் சமூக நோக்கத்துடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.