டெல்லி: சுருக்குமடி வலையில் மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கிக் கொள்வதால் அந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு கடந்த 2014-ஆம் ஆண்டு 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்க வலியுறுத்தி மீனவர் நலச்சங்கம் சார்பில் செனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஞானசேகரம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்குமடி வலைக்குத் தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன்பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதாகும், அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் இதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்பதால் சுருக்குமடி வலை தடையை நீக்கக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.