போபால்:மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், உயிரிழந்த குழந்தையின் உறவினரான அனிதா கௌல் என்பவரின் கனவில் கடவுள் குல்தேவி வந்துள்ளது. அப்போது, குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்து, ஒரு சிகப்பு துணியில் கட்டி வந்து, தன் பாதத்தில் வைத்து பூஜை செய்தால், அக்குழந்தைக்கு மீண்டும் உயிர் கொடுப்பதாக குல்தேவி தன்னிடம் தெரிவித்ததாக அனிதா கூறுகிறார். இதனை அனிதா, கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரேவா மாவட்டத்தின் பீடி கிராமத்தைச் சேர்ந்த அனிதாவும், அவருடன் நூற்றுக்கணக்கான கிராம மக்களும் சேர்ந்து 20 கி.மீ., தொலைவில் இருக்கும் பக்ஷேரா கிராமத்தில் உள்ள குல்தேவி கோயிலில் குழந்தையை மீண்டும் உயிருடன் வரவைக்க, தேவியின் பாதத்தில் எலும்பு ஒன்றை வைத்து தற்போது பூஜை செய்து வருகின்றனர். தொடர்ந்து பஜனை மற்றும் கீர்த்தனைகளை பாடியும் தங்களது வேண்டுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றுதானே கடவுள் கூறியது, எதற்கு எலும்பு ? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த அக்கிராமத்தினர், "குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை வீட்டில் வைத்திருந்தபோது, அதிசயமாக அது ஒரு பூவாக மாறியது. அதே பூ, சிறிது நேரத்தில் எலும்பாக மாறியது" என்றனர்.
10 நாள்களாக அந்த எலும்பு உயிரிழந்த குழந்தையின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் அனுமதியோடு குல்தேவி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். தற்போது, ஒரு கிராமமே, அந்த எலும்பு எப்போது குழந்தையாக மாறும் என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கின்றனர். குல்தேவி கோயிலில் நூற்றுக்கணக்கான கிராமத்தினரை தினமும் காண முடிகிறது. அவர்கள் கோயிலேயே அமர்ந்து, குழந்தைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.
இறந்த குழந்தை உயிருடன் வரும்... கடவுள் கனவில் கூறியதாக பெண் செய்யும் விநோத பூஜை அப்போது, குல்தேவி தன்மீது இறங்கியிருப்பதாக கூறும் குழந்தையின் உறவினர் அனிதா செய்தியாளர்களை சந்தித்தார். திடீரென சாமி வந்தது போன்று கூச்சலிட்ட அவர், மீண்டும் குழந்தை உயிர் பெற்று வரும் என உரக்க கூறினார். அதற்கு இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் என கேட்டதற்கு, கோபப்பட்டு கத்திய அவர், வேறு எந்த பதிலையும் அளிக்கவில்லை.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த ரேவா மாவட்டத்தில், பீடி என்ற கிராமத்தை சேர்ந்த 4 வயது குழந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று அந்த குழந்தை, உயிரிழந்த பின் அதன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை...