பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர். இவரது படங்கள் வெளியாகும் நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருபவர். இவரது படங்கள் தான் இன்று வரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களாக உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை சுமார் ரூ.600 கோடி வசூலை கடந்துள்ள போதிலும் உலகம் முழுவதும் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவராஜ் குமார், மோகன் லால் ஆகியோரின் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். இதனால் தர்பார், அண்ணாத்த தோல்வியால் துவண்டு போய் இருந்த ரஜினிகாந்துக்கு மீண்டும் மிகப் பெரிய வெற்றியாக ஜெயிலர் அமைந்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்துடன் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார்.
ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஊழியர்கள் ஜெயிலர் படத்தின் வெளியீட்டுக்கு முன் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றார். அங்கு பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் உத்தரபிரதேசம் சென்ற ரஜினி அம்மாநில முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது அவரது காலில் ரஜினி விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது பயணத்தை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். அப்போது இந்த சர்ச்சைக்கு தனது பதிலால் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இன்று(29.08.2023) பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் தான் பணியாற்றிய பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்(BMTC) ஜெயநகரா பணிமனைக்கு சென்றுள்ளார். பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், பணிமனையில் இருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். திடீரென அங்கு வந்த ரஜினிகாந்தை பார்த்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினிகாந்த் நடிகராக ஆவதற்கு முன் அங்குதான் நடத்துனராக இருந்துள்ளார்.
பணிமனையில் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்ட ரஜினிகாந்துடன் ஊழியர்கள் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:Thani Oruvan 2: ஏஜிஎஸ் வெளியிட்ட 'தனி ஒருவன் 2' அப்டேட்.. சென்னையில் 'தனி ஒருவன்' சிறப்பு காட்சியை கொண்டாடிய படக்குழு!