தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் நியமனம்... சரத் பவாருக்கு அடுத்தடுத்து நெருக்கடி! - Sunil Tatkare

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சுனில் தாட்கரே நியமிக்கப்பட்டு உள்ளார். சட்டமன்ற தலைமைக் கொறடாவாக அனில் பைதாஸ் பாடீலை நியமித்து அஜித் பவார் ஆதரவு கட்சித் தலைவர் பிரஃபுல் பாட்டீல் உத்தரவிட்டு உள்ளார்.

NCP
NCP

By

Published : Jul 3, 2023, 6:01 PM IST

மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக சுனில் தாட்கரே நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் சட்டமன்ற தலைமை கொறடாவாக அனில் பைதாஸ் பாடீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அஜித் பவார், பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மராட்டிய துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அஜித் பவாரை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரஃபுல் பட்டேல், அனில் தாட்கரே உள்ளிட்டோரும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக சுனில் தாட்கரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரஃபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவராக சுனில் தாட்க்ரே நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், கட்சியில் அமைப்பு சார்ந்த மாற்றங்களை கொண்டு வர அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மராட்டிய சட்டமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடாவாக அனில் பைதாஸ் பாட்டீல் நியமிக்கப்பட்டு உள்ளதாக பிரஃபுல் பட்டீல் தெரிவித்தார். அதேநேரம் சரத் பவார் தரப்பில் ஜிதேந்திர அவாஹத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் - சிவசேனா (உத்தவ் அணி) - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலம் குறைந்ததை அடுத்து பெரும்பான்மையுடன் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் அடுத்த எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்பட 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகளுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் அதரவு தனக்கு இருப்பதாகவும், தங்களது தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும் அஜித் பவார் தெரிவித்தார். இதனிடையே அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாக்கா ஒதுக்குவது குறித்து துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசிடம் அஜித் பவார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க :இலாக்கா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை... அஜித் பவாருக்கு மின்சாரமா? நிதித் துறையா?

ABOUT THE AUTHOR

...view details