தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் - சுனில் அரோரா

தமிழ்நாடு, புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

சுனில் அரோரா
சுனில் அரோரா

By

Published : Feb 12, 2021, 6:45 PM IST

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அங்கீகரிக்கப்பட்ட பத்து அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம்.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 84.08 விழுக்காடு வாக்குப்பதிவும், மக்களவைத் தேர்தலில் 81 விழுக்காடும் பதிவானது. எழுத்தறிவு விழுக்காடும், விழிப்புணர்வும் அதிகம் என்பதால் வாக்கு விழுக்காடு புதுச்சேரியில் அதிகமாக இருக்கும்.

எவ்வித பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்துவோம். அரசியல் கட்சித் தலைவர்கள் புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், தமிழ்நாடு-புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்குரிமை தருவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை சரிசெய்வது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நியமன எம்எல்ஏக்களை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டம் 239ஏ (1)ன்படி புதுச்சேரி சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்வான 30 எம்எல்ஏக்கள் தவிர மத்திய அரசு மூன்று நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது.

சுனில் அரோரா

நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது, வாக்களிப்பது விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலு‌ம் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக ஏழு நாட்கள் அவகாசம் அளித்து சரி செய்ய வேண்டும். உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பிறகே சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.

கரோனா காரணமாக புதுச்சேரி காரணமாக 952 வாக்குச்சாவடிகளை 1,564 ஆக உயர்த்தியுள்ளோம். தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து கரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் தற்போது மது விலையில் மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து மது, சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவச பொருள்கள், வேட்டி, சேலை, பரிசுப் பொருள்கள் ஆகியவை பதுக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.

அதற்காக கலால் துறை, மத்திய அமலாக்கத் துறை, இதுதொடர்பான துறை அலுவலர்களுடன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணம் பரிசு பொருள் தந்ததற்காக தேர்தல், தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுபொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

மேலு‌ம் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் செலவுத்தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 22 லட்சமாக அதிகரித்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க...'உன் தாத்தாவிடம் கேள்'- ராகுல் காந்திக்கு அமைச்சர் காட்டமான பதில்!

ABOUT THE AUTHOR

...view details