சென்னை:சந்திரயான் 3 வெற்றியைத் தொடந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா, ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை ஏவியது. பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT), சூரியனின் முதல் முழு-வட்டப் படங்களை, அருகிலுள்ள புற ஊதா அலைநீளங்களில் படம் பிடித்துள்ளது. SUIT பேலோட் நவம்பர் 20, 2023 அன்று இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதல் ஒளி அறிவியல் படங்களை டிசம்பர் 6, 2023 அன்று தொலைநோக்கியால் கைப்பற்றப்பட்டதாக இஸ்ரோ தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து SUIT கருவியானது, 200-400 நானோ மீட்டர் வரையிலான சூரியனின் முதல் முழு-வட்டப் படங்களை வெற்றிகரமாக படம் பிடித்துள்ளது. பல்வேறு அறிவியல் பில்டர்களைப் பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் குறித்தான வடிவங்களை ஆதித்யா எல்-1 தெளிவாக படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 விநாடியில் ககன்யான் டிவி-டி1 சோதனை விண்கலம் நிறுத்தம் - இஸ்ரோ தலைவர் முக்கிய அறிவிப்பு!
மேலும் இதுவரை எடுக்கப்படாத இந்த படங்கள், 11 வெவ்வேறு பில்டர்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியான படங்களில் சூரிய புள்ளிகள் (sunspots), பிளேஜ் (plage) மற்றும் அமைதியான சூரியப் பகுதிகள் (quiet Sun regions) ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவை சூரியனின் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான விவரங்கள் பற்றிய முன்னோடி நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது. மேலும் இந்த ஆய்வுகள் காந்தமயமாக்கப்பட்ட சூரிய வளிமண்டலத்தின் மாறும் இணைப்பு மற்றும் பூமியின் காலநிலையில் சூரிய கதிர்வீச்சின் விளைவுகளில், இறுக்கமான கட்டுப்பாடுகளை அமைப்பதில் விஞ்ஞானிகளுக்கு உதவும் என இஸ்ரோ கூறியுள்ளது.
SUIT-இன் வளர்ச்சியானது, புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியல் இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையத்தின் தலைமையுடனான கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டு முயற்சியில் இஸ்ரோ, மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், ஐஐஎஸ்இஆர் (IISER) கொல்கத்தாவில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மையம், பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம், உதய்பூர் சோலார் அப்சர்வேட்டரி (USO-PRL) மற்றும் அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிராஃப் வடிவில் சூரிய கதிர்களை வெளியிட்ட இஸ்ரோ: ஆதித்யா எல்-1ன் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!