செம்மொழியான ‘தமிழ்மொழி’ எங்கே? ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பும் சு.வெ! - கோவின் தளம்
17:05 June 04
கரோனா தடுப்பூசி செலுத்த பயன்பாட்டில் உள்ள அரசின் கோவின் தளத்தில் தமிழ் மொழிக்கான தேர்வு ஏன் கொடுக்கப்படவில்லை என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் கோவின் இணையதளம் அல்லது செயலியில் பதிவுசெய்ய வேண்டும். இச்சூழலில், இந்த தளத்தில் பொதுமக்கள் இலகுவாக பதிவுசெய்ய, பிராந்திய மொழிகளின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ‘தமிழ்’ மொழி தவிர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.