நியூயார்க்: கருவுற்றபின் பெண்கள் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமானது தான். சிலருக்கு முதுகுவலி, அரிப்பு, கால்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் எந்த வெளிப்படையான காரணமும் இன்றி சோகமாக இருத்தல், குழந்தை பிறப்பு மற்றும் பெற்றோராக இருக்கப்போவது குறித்த கவலை, பதற்றம் ஆகியவை தொற்றிக் கொள்ளும். இதுபோன்ற பிரச்னையால் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றங்கள், சோர்வு, உடல் சார்ந்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இந்நிலையில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பதற்றம், கவலை, அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பையே பாதிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெய்ல் கார்னல் மெடிசின் நிறுவனம், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இர்விங் மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் பதற்றம், கவலையுடன் இருக்கும் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது ரத்த ஓட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்வது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெய்ல் கார்னல் மெடிசின் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் லாரென் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் தைரியமாக இருக்கும் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பதற்றத்துடன் இருக்கும் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்துக்குப் பிறகும் இது தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.