கதிஹார்(பிகார்): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாராலாண்ட் கிராமத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு ஒரு நிலப்பரப்பை கண்டுபிடிப்பதற்கு சிரமமான நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் படிப்பும் பொ்ன்னான நேரமும் விரையமாகக் கூடாது என்று இரண்டு ஆசிரியர்கள் ஒரு புதுமையான யோசனையை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் படகுகளை தற்காலிக பள்ளிக்கூடங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகின்றனர்.
இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும்போதிலும், மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஆசிரியர்களின் வேட்கையை அதனால் குலைக்க முடியவில்லை. கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிகாரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இறந்தவர்களை புதைப்பதற்கு கூட வறண்ட நிலைத்தக் கண்டுபிடிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது பள்ளிகளைத் திறக்க பெரும் சிக்கலாக வெள்ளம் உருவெடுத்துள்ளது.
"இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி. ஆறு மாதங்களுக்கு இங்கு தண்ணீர் இருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நிலம் வறண்டிருக்கும். இதனால் படகுகள்தான் எங்களுக்கான ஒரே வழி. படகுகளுடன் எங்களுக்கு ஒரு ஆழமான உறவு உண்டு. இங்குள்ள குழந்தைகளுக்கு தண்ணீரைக் கண்டு பயம் இல்லை. அது ஒரு பழக்கமாகிவிட்டது. 12 நாள்களுக்கு முன்பு நாங்கள் இங்கு வரும்போது நாங்கள் நனைந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இருந்தது . இப்போது பரவாயில்லை" என்கிறார் பங்கஜ் குமார் சாஹ்.