ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்):டி20 உலகக்கோப்பை தொடர் அக். 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 24) அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, ஷேர்-இ- காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகிய கல்வி நிலையங்களை சேர்ந்த சில மாணவர்கள் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதுடன், இந்திய நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
சிவ சேனா ட்வீட்
இந்த காணொலியை, சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக். 26) பகிர்ந்து கடும் கண்டனத்தையும் பதிவுசெய்தார்.
அந்த ட்வீட்டில்," டி20 உலக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியையும், இந்திய அணியின் தோல்வியையும் கொண்டாடியது மட்டுமில்லாமல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் வருகையின் போது இந்திய நாட்டிற்கு எதிரான முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர். இவர்கள் மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார்
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..!