டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் இன்று மோசமான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காற்றின் வேகம் மற்றும் லேசான மழையின் காரணமாக அடுத்த இரண்டு நாள்களில் தரம் கணிசமாக மேம்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று(டிச. 11) காலை 9 மணி நிலவரப்படி, காற்றின் தர குறியீடு 271 ஆக இருந்தது. இவை நேற்றைய நிலவரப்படி சராசரி 284 ஆக இருந்தது.
அண்டை நகரங்களான காசியாபாத், கிரேட்டர் நொய்டா மற்றும் நொய்டா ஆகியவை முறையே 330, 322, 310 என மிகவும் மோசமான பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.
காற்றோட்டம் மற்றும் மழைப்பொழிவு ஏற்பட்டால் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் காற்றின் தரம் கணிசமாக மேம்படும் என்று டெல்லிக்கான மத்திய அரசின் காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.