டெல்லி: 'ஹமூன்' புயல் அதிதீவிர புயலாக வலுப் பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.24) தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஹமூன்' புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு 'ஹமூன்' என்ற பெயர் ஈரானால் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஹமூன்' என்பது பாரசீக வார்த்தையாகும். இது ஈரானில் உள்ள பாலைவன ஏரிகளைக் குறிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
'ஹமூன்' புயல் அதிதீவிர புயலாக மாறி, பின் வடகிழக்கு நோக்கி நகரும்போது வலுவிழந்து, நாளை (அக்.25) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா, தீவு-சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 65-75 கி.மீ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.