டெல்லி:கடுமையான காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி சமயத்தில், டெல்லியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு வரும் 30ஆம் தேதி வரை தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
இதுகுறித்து பேசிய டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தாவா, "டெல்லியில் காற்று மாசினைக் குறைக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கிலே பட்டாசுகளை வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க காவல்துறையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பர்.
பசுமை தீர்பாயத்தின் உத்தரவினை அடுத்து, பட்டாசு விற்பனை செய்வதற்காக வணிகர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வரும் 30ஆம் தேதிவரை மக்கள் பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.