ஒடிசா: தேன்கனல் மாவட்டத்தில் மிராமண்டலி என்ற இடத்தில் டாடா ஸ்டீல் உருக்காலை இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையத்தில், இன்று (ஜூன் 13) பிற்பகலில் திடீரென நீராவிக்குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால், குழாயிலிருந்து உயர்வெப்பநிலை கொண்ட நீராவி வெளியேறியது. இதில், ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் பலரும் காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்த ஊழியர்களை மீட்டு, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நீராவிக் கசிவால் 19 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டாடா ஸ்டீல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து டாடா ஸ்டீல் உருக்காலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில், மின் உற்பத்தி நிலையத்தில் நீராவிக் கசிவால் ஏற்பட்ட விபத்து குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம். இன்று மதியம் 1 மணியளவில் ஆய்வுப் பணியின் போது இந்த விபத்து நடந்தது. இதில் சில ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆலை வளாகத்தில் உள்ள தொழில்சார் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கிற்கு மாற்றப்பட்டனர்.