தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு கிராமத்தையே தனியாருக்கு விற்ற அரசு... உரிமைக்காக நீதிமன்றத்தை நாடிய மக்கள்! - நிலத்திற்கு ஆவணங்கள் இல்லை

ஜார்க்கண்ட்டில் அரசாங்கம் ஒரு கிராமத்தையே தனியாருக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இதுகுறித்து அறிந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

state
state

By

Published : Nov 22, 2022, 10:03 PM IST

பாலமு: ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டத்தில் உள்ள "சுனில் முகர்ஜி நகர்", 90களில் இடதுசாரி அமைப்புகளின் உதவியால் உருவானது. சுமார் 465 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கும் எந்த அரசியல் கட்சிகளும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வளர்ச்சித்திட்டங்களையும் அங்கு செயல்படுத்தவில்லை. அத்தியாவசிய தேவைகளைக்கூட செய்து தரவில்லை. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெரிய பின்புலம் ஏதுமின்றி எளிய மக்கள் வாழ்ந்துவரும் இந்த சுனில் முகர்ஜி நகர் கிராமத்தை, ஜார்க்கண்ட் அரசாங்கம் தனியாருக்கு விற்றுவிட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கிராம மக்களிடம் வீடுகள், நிலங்கள் இருந்தாலும், அவற்றிற்கான அரசு ஆவணங்கள் இல்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கிராமம் தனியாருக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் யாரும் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

அண்மையில், குறிப்பிட்ட தனியார் நிறுவனம் கிராமத்தில் கட்டுமானங்களைக் கட்டுவதற்காக கற்கள், சிமென்ட்டையும் கொட்டியுள்ளது. அவர்களிடம் கேட்டபோதுதான், கிராம மக்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே கிராமத்தில் உள்ள நிலம் தனியாருக்கு விற்கப்பட்டதாகத் தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் பாலமு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அங்கு வசிப்பதால், நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்றும், தனியாருக்கு விற்றது சட்டவிரோதம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுனில் முகர்ஜி நகர் தனஞ்சய் பிரசாத் மேத்தா கூறுகையில், "இது எங்கள் நிலம், பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். மாநில அரசு இந்த கிராமத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம்" என்றார்.

கிராமத்தைச் சேர்ந்த நவுரங் பால் கூறுகையில், "சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமம் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குத் தெரியாது. பிறகு ஒரு நாள், அந்த நிறுவனம் கற்களையும், சிமென்ட்டையும் கொட்டியது. அதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது. இது குறித்து எந்த அதிகாரிகளும் கிராமத்திற்குத் தகவல் தெரிவிக்கவில்லை" என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், இந்தப் பிரச்னை குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்ட கிராம மக்கள் இப்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டு, நீதிக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சிப்பாதை மீது உலகளாவிய நம்பிக்கை உள்ளது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details