பெங்களூரு:கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல், வருகிற மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பிரதானக் கட்சிகள் முதல் சுயேச்சைகள் வரை, அனைவரும் தங்களது சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் பணியில், தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல் துறையினரின் அதிரடி சோதனை மூலம், கடந்த 20 நாட்களில் 187.17 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை 187.17 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதை மருந்துகள், தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவை தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மாநில காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றில், 75.17 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 19.05 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பரிசுப் பொருட்கள், 40.93 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 9 லட்சத்து 82 ஆயிரத்து 756 லிட்டர் மதுபானம், 15.2 கோடி ரூபாய் மதிப்பிலான 908 கிலோ எடை உள்ள போதை மருந்துகள், 33.61 கோடி ரூபாய் மதிப்புடைய 75.30 கிலோ தங்கம் மற்றும் 3.21 கோடி ரூபாய் மதிப்புடைய 454.707 கிலோ எடை கொண்ட சில்வர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், ரொக்கப் பணம், மதுபானம், போதை மருந்துகள், மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் இலவச பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ததன் அடிப்படையில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல் துறையினரால் ஆயிரத்து 550 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவித்த நாளில் இருந்து, மேற்குறிப்பிட்ட தேதி வரை 69 ஆயிரத்து 104 ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.