தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேரிடர் நிதியை பயன்படுத்த நிபந்தனைகள் கூடாது - தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் - அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

தமிழ்நாடு, பல்வேறு பேரிடர்களின் காரணமாக பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதால் மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ஒரு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் மொத்த ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டுக்கு மேல் செலவிட இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திட வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 14, 2023, 9:21 AM IST

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல்வேறு பேரிடர்களின் காரணமாக தமிழ்நாடு, பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிவித்தார். இதனால், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து, ஒரு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு, நிதியின் மொத்த ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டுக்கு மேல் செலவிட இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், சமீப காலங்களில், பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதும், அவற்றின் தாக்கம் மிகக் கூடுதலாக இருப்பதும், பேரிடர் நிர்வாக அமைப்புகள், எக்காலத்திலும் தயார்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில், வெள்ளம், கனமழை அதனால் பயிர் சேதங்கள், ஆறுகள், கால்வாய் உடைப்புகள், இடி மின்னலுடன் ஏற்படும் கனமழை, உயிர் சேதங்கள், நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.

மேலும், மழைப் பற்றாக்குறை ஏற்பட்டு அதனால் குடிநீர் விநியோகம் பாதிப்பு மற்றும் வறட்சியால் பயிர் சேதங்கள் ஏற்பட்டதும் உண்டு. நான் விவரித்த பாதிப்புகளிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது, இச்சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், அரசு தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்கும் மாநில செயலாக்க குழுவும், மாநில நிவாரண ஆணையரின் தலைமையில் இயங்கும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இயங்கும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும் சிறப்பான முறையில் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள உள்துறை அமைச்சகத்தோடும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தோடும் தொடர்பு கொண்டு, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறோம் எனக்கூறிய அமைச்சர், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஆயத்த நிலை குறித்து கேட்கப்பட்ட 14 விவரங்கள் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்வைத்த கோரிக்கைகள்!

1.15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் தணிப்பு நிதி, மாநில பேரிடர் தணிப்பு நிதி பயன்பாட்டுக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.

2. பேரிடர் மேலாண்மையில் முழுப்பொறுப்பும் மாநில அரசை சார்ந்ததாக இருக்கும் பொழுது திட்ட செயல்பாட்டு வழிமுறைகள், மாநிலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டுமே அன்றி இதனை முடக்குவதாக இருக்கக் கூடாது.

3. பேரிடர் தணிப்பு பணிகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் தான் மாநிலத்தின் பேரிடர் தணிப்புப் பணிகளுக்கு தேவையான தொகை தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து கிடைக்கப்பெறும் என்ற நிலை மாற்றப்பட்டு மாநில அரசு, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையிலேயே மத்திய ஒதுக்கீடு வழங்குவது பரிசீலிக்கப்பட்டு திட்ட ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.

4. சிறப்புத் திட்டங்களான வறட்சி தணிப்பு திட்டம், இடி மின்னல் பாதிப்பு தணிப்புத் திட்டம், தீயணைப்புத் துறை நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, திட்டப்பணிகள் விரைவில் மேற்கொள்ளும் வகையில் திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

5. மாநில பேரிடர் நிவாரண நிதித் தொகுப்பில் விதிக்கப்பட்டுள்ள வரன் முறைகள் மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் தணிப்பு நிதியின் நிதியளிப்பு இனங்கள் ஒன்றுக்கொன்று மாறக்கூடியவை அல்ல என்றாலும், அந்தந்த நிதிகளின் துணைச் சாளரங்களுக்குள் நெகிழ்வுத்தன்மை மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்படலாம். அத்தகைய மறு ஒதுக்கீடு அந்த துணை சாளரத்தின் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட வேண்டும்.ஒரு நிதி ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பேரிடருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 50 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

6. மாநில அரசின் எழுத்துப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் தேசிய செயற்குழுவினுடைய துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நிபந்தனையை உள்துறை அமைச்சகம் தளர்த்தலாம். தமிழ்நாடு, பல்வேறு பேரிடர்களின் காரணமாக பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதால் மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ஒரு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் மொத்த ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டுக்கு மேல் செலவிட இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திட வேண்டும்.

7. மாநில பேரிடர் நிவாரண நிதியின் நான்கு பிரிவுகளின் ஒரு பிரிவான சீரமைப்பிற்காக குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகளுக்காக நிதி தேவைப்படும் நேர்வுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் இதர பிரிவுகளான மீட்பு மற்றும் நிவாரணம், ஆயத்த நிலை, திறன் மேம்பாடு ஆகியவற்றிலிருந்து சீரமைப்பு பணிகளுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ED raids: தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. புறவாசல் வழியாக அச்சுறுத்த முயற்சி என முதல்வர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details