டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றது முதல் 'மன் கி பாத்' என்னும் 'மனதில் குரல்' நிகழ்ச்சி வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஆக.29) 80ஆவது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரகாசமான எதிர்காலம்
அதில் ”இந்தியாவில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் துடிப்பானதாக மாறியுள்ளது. சிறிய நகரத்திலுள்ள இளைஞர்களிடத்திலும் இது சென்றடைந்துள்ளது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடையாளம் இது.
விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் கால் பதித்துள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்
இளைஞர்கள் ஆர்வம்
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது. ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக க்கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களிடையே இப்போது விளையாட்டு மீதான ஆர்வத்தை பார்க்கிறோம். அவர்களின் பெற்றோர்களும் இதை ஆதரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆர்வம் தான் மேஜர் தயான் சந்திற்கு செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி என்றார். மேலும் விளையாட்டுத்துறையை முன்னேற்ற கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும்” எனப் பேசினார்.
இந்திய கலாச்சாரம், ஆன்மீகம்
தொடர்ந்து பேசிய அவர்,”இந்திய கலாச்சாரமும் ஆன்மீகமும் உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம். அவற்றின் அறிவியல் அர்த்தத்தையும் அவற்றிற்குப் பின்னால் உள்ள அர்த்தத்தையும் புரிந்துகொள்வோம். ஒவ்வொரு பண்டிகையிலும் ஒரு அடிப்படை செய்தி உள்ளது. நாளை திங்கள் கிழமை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமஸ்கிருதம்
சமஸ்கிருத மொழி அறிவை வளர்க்கவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவுகிறது. சமஸ்கிருத இலக்கியம் மனிதநேயம் மற்றும் அறிவின் தெய்வீகத் தத்துவத்தை உள்ளடக்கியது.
கரோனா தடுப்பூசி
நாட்டில் 62 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'இளைஞர்களின் தீராத வேட்கைதான் தயான் சந்திற்கான சிறந்த நினைவஞ்சலி' - மோடி