பெங்களூரு:நூற்றாண்டு காலப் பிரச்னையாக பார்க்கப்பட்ட பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில் கட்டுமானம் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து, 2019ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பிரதமர் மோடி இந்த கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் தொழில்நுட்பங்களுடன் சிறப்பான கலைநயம் நிறைந்து பிரமிக்க வைக்கும் வகையில் தயாராகும் ராமர் கோயில், இந்த ஆண்டு இறுதியில் முதல் தளம் நிறைவு செய்யப்பட்டு 2024ஆம் ஆண்டு கோயில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்கு பெயர் போனது என்ற வரிசையில், இருக்கும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீராம் சேனாவின் தேசிய தலைவரான பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரமோத் முத்தாலிக், “அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பின்னால் ஆயிரக்கணக்கான இந்துக்களின் தியாகம் மற்றும் அவர்களின் பிரார்த்தனை நிறைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் பலர் இன்றளவிலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் பாபர் மசூதி கட்டவும் இஸ்லாமியர்கள் தயாராக உள்ளனர்.