இலங்கையில் ஏற்கெனவே ஆளும் அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்ட நிலையில் தொங்கு நாடாளுமன்றம் தற்போது உள்ளது. அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பல தரப்பினரும் தங்கள் யோசனைகளை முன்வைத்து வருகின்றனர். ஏப்.5-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும்:இலங்கையில் 2020ஆம் ஆண்டு ஆக.05-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்படி 9ஆவது நாடாளுமன்றத்திற்கு 2025 வரை பதவி காலம் உள்ளது. இலங்கை அரசியலமைப்பின்படி பதவிக்காலம் முடியும் முன்பு நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். இதற்காக 2023ம் ஆண்டு பிப்ரவரி வரையிலும் காத்திருக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
இதனிடையே சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்திலும், அரசியலமைப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவது யோசனையாக இலங்கை ஜனாதிபதி பதவி விலகுவது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியை பதவி விலகுமாறு தன்னால் கோர முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.
நிலவும் சிக்கல்:இதனால் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்தது. இதற்கு அடுத்த யோசனையாக நாட்டின் பொருளாதார நிலைமை சாதாரண நிலைக்கு வரும் வரை இடைக்கால அரசை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பொருளாதார நிபுணத்துவம் பெற்ற 25 நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமன அடிப்படையில் தேர்வு செய்யலாம் எனவும், நெருக்கடி நிலை தீரும் வரை அவர்களின் வழிகாட்டலுடன் ஆட்சியை முன்னெடுக்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.
இதையும் படிங்க:ராஜஸ்தான் டூ டெல்லி: ராணுவ வேட்கையால் 350 கி.மீட்டர் ஓடிய இளைஞர்