டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தலில், சஞ்சய் குமார் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் ஆவார். இதனால், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களும், அவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவுக்கரம் நீட்டியவர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
அதிலும், மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீருடன் கடந்த டிசம்பர் 21 அன்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்தார். இது தேசிய அளவிலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம், தாங்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிறுத்தவில்லை என்றும், ஒரு விளையாட்டு அமைப்பாக செயல்படும்போது அவர்கள் தேவையான விதிகள் மற்றும் உரிய செயல்முறையை பின்பற்ற வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.