டெல்லி:நடப்பாண்டில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து அமர்வுகளைக் கொண்டதாக நடைபெற உள்ளது. இது 17வது மக்களவையின் 13வது அமர்வு மற்றும் ராஜ்யசபாவின் 261 வது அமர்வு ஆகும். இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதனை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது 'X' பக்கத்தில் இன்று (ஆக.31) வெளியிட்டுள்ளார்.
இதில் குறிப்பாக மணிப்பூர் கலவரம், டெல்லி அவசர சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல விவாரங்களை மக்களவை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றன. அதோடு, தமிழ்நாடு எம்பிக்கள் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தனது கூட்டணியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மக்களவையில் அமைச்சர்கள் குழுவிற்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து பதிலளித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவையில், காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்திய மணிப்பூர் கலவரத்தில் (Manipur Riots) 150 பேருக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த சம்பவம், பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியின் 'இந்தியா' கூட்டணியினர் (Opposition I.N.D.I.A. Alliance) கூச்சல் எழுப்பினர். இந்த கூச்சலையும் மீறி அப்போது மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியின் மௌனத்தை களைக்கவே மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.