டெல்லி : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக நேற்று (செப். 17) நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது தவிர வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட் மசோதாக்களும் மக்களவை நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளன. முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.