நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் ஒடிசாவை சேர்ந்த பெண் உறுப்பினரை பேச சபாநாயகர் ஓம் பிர்லா ஊக்குவித்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான பிரமிலா பிசோயி என்ற அந்த பெண் உறுப்பினர் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர். கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுவை சிறப்பாக முன்னடத்திய பிரமிலா முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
தனது தாய் மொழியான ஓடியா மொழியில் மட்டுமே பேச தெரிந்தவரான இவர் பெண்களிடம் நிலவும் வேலையின்மை பிரச்னை குறித்து இன்று உரையாற்றினார். கோவிட்-19 காரணமாக பெண்கள் அதிகளவில் வேலையிழந்ததாகவும், இன்னும் இவர்களுக்கு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரமிலா பேசி முடித்ததும், அவரது பேச்சை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நெகிழ்ந்து பாராட்டினார். ஆரம்பத்தில் பிரமிலா பேசுவதற்கு வெகுவாக தயக்கம் காட்டியதாகவும், தனது தொடர் ஊக்கத்தாலும் வலியுறுத்தலாலும் பிரமிலா தயக்கத்தை விட்டு பேசியுள்ளதாகவும் ஓம் பிர்லா கூறினார்.