நியூ யார்க்: எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ராக்கெட் வளிமண்டலத்தில் உள்ள அயனோஸ்பியரில் தற்காலிக துளையை ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்க விண்வெளி இயற்பியல் விஞ்ஞானி தகவல் தெரிவித்து உள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் ஸ்பேஸ் போர்ஸ் ஏவுதளத்தில் இருந்து கடந்த 19 ஆம் தேதி பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட்டின் காணொலியை ஆய்வு செய்த போது நிலத்தில் இருந்து 286 கிலோ மீட்டர் தொலைவில் வளிமண்டலத்தில் இளஞ் சிவப்பு நிற ஒளி தோன்றியதாக கூறப்பட்டு உள்ளது.
அதிவேக செயல்பாடு காரணமாக வளிமண்டலத்தில் உள்ள அயனோஸ்பியரில் தற்காலிக துளையை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏற்படுத்தியதாக அந்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அந்த விஞ்ஞானி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இது போன்ற சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பது முதல்முறை அல்ல என்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பார்மோசாட் 5 என்ற செயற்கைகோளை கொண்டு சென்ற பால்கன் 9 ராக்கெட் எடை குறைவு காரணமாக பூமியின் மேற்பரப்பிற்கு இணையாக பயணிக்காமல் செங்குத்து பாதையில் பயணித்ததாகவும் இதனால் அதிர்வலைகள் உருவாகியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் அயனோஸ்பியரில் தற்காலிக துளை ஏற்பட்டதாக அவர் கூறி உள்ளார். இதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடந்து கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். சூரியனிடம் இருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களின் ஆற்றலால் அயனோஸ்பியரில் உள்ள காற்றின் மூலக் கூறுகள் அயனிக்கப்படுவதாகவும் இந்த இடையூறுகளால் அது தடைபடுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த அயனிக் கதிர்கள் ரேடியோ பிரிக்யூயன்சி அலைகளை எதிரொலிக்கும் தன்மை கொண்டது என அவர் தெரிவித்து உள்லார். தகவல் தொடர்புக்கும் வழிகாட்டுதலுக்கும், ரேடியோ அலைகளை பயன்படுத்தவும் இந்த அயனோஸ்பியர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூரியனிடம் இருந்து வரும் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஆகிய கெடுதல் விளைவிக்கும் கதிர்களை இந்த அயனோஸ்பியர் உறிஞ்சி அதை அப்படியே பூமிக்கு அனுப்பாமல் மனிதர்களை பாதுகாப்பதாக அந்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். இது போன்ற கதிர்கள் மனிதர்களுக்கு புற்றுநோயை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நிலையில் அதை இந்த அயனோஸ்பியர் படலம் தடுத்து நிறுத்துவதாக அந்த விஞ்ஞானி கூறினார்.
இதையும் படிங்க :டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தகவல்!