பெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் கடந்த 23ஆம் தேதி திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நிலவில் தரையிறங்கிய லேண்டரும், ரோவரும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகின்றன.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இஸ்ரோ நீண்ட காலமாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக "ஆதித்யா-எல்1" (Aditya-L1) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி XL ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே லெக்ராஞ்சியன் என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. லெக்ராஞ்சியன் (எல்1) புள்ளியிலிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் தொடர்பாக, விண்வெளி ஆய்வாளரான கிரிஷ் லிங்கண்ணா ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஆதித்யா-எல்1 விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு செய்யும். அது சூரியனைப் புகைப்படங்கள் எடுக்கும். சூரியனிலிருந்து கனிசமான தொலைவில் உள்ள புள்ளியில்தான் விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது. விண்கலத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏழு நவீன கருவிகள் உள்ளன. சூரியனின் மேற்பரப்பையும், சூரியன் வெளியிடும் வெப்பம், காற்று போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்.