ராம்பூர்:சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான அசம் கான் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் இரு தரப்பினருக்கிடையே வெறுப்பு உண்டாக்கும் நோக்கில் பேசியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (அக்-27) ராம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அசாம் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ என்பதால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும் அசாம் கான் தரப்பினர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கோரினார். இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அரசின் சார்பில் பாண்டே வாதிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையில் அசாம் கான் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை இழிவு படுத்துமாறு பேசினார். ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாக அசாம் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கானுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று IPC பிரிவுகள் 153-A (வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல்) மற்றும் 505(1) ( வதந்தி அல்லது பொய்யான அறிக்கையை வெளியிடுதல் மற்றும் பரப்புதல்) மற்றும் பிரிவு 125 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஐந்து சாட்சிகளும், பிரதிவாதி தரப்பில் ஐந்து சாட்சிகளும் ஆஜராகினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று குற்றங்களுக்காகவும் தலா 2,000 ரூபாய் வீதம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. .முன்னதாக 2017 முதல் 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் அசாம் கான் மீது போடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க:டிஆர்எஸ் எம்.எல்.ஏக்களை வாங்க முயற்சித்த வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக மனு!