டெல்லி:அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனனம் கடந்த சில நாட்களுக்கு முன், அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பலவீனமான வணிக அடிப்படைகளை கொண்டுள்ளது என்றும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பங்குசந்தையில் தங்களது நிறுவனத்தின் பங்குகளை செயற்கையாக உயர்தியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டகள் கூறப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையின் விளைவாக அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் 10 நிறுவனங்கள் 8 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளன. இருப்பினும் அதானி குழுமம் தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது.
மேலும் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டாலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீதான எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் நடுத்தர மக்களின் சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று (பிப்ரவரி 6) நாடு முழுவதும் எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கி கிளைகளின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.