டெல்லி :எதிர்க்கட்சிகளின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மும்பையில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்டமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 26ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) என பெயரிடப்பட்டது.
தொகுதி பங்கீடு, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது, தேர்தல் வியூகம் வகுக்க அனைத்து கட்சிகளை கொண்ட 11 உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மும்பையில் வைத்து எதிர்க்கட்சிகளின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தை உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் நடைபெற உள்ள 3வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்துவது மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்வு மற்றும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் நியமனம், அனைத்துக் கட்சிகளுக்கு பொதுவான தேர்தல் செயலக அலுவலகம் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு - சிபிஐ விசாரணை!