சென்னை:ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதி கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஆரம்பத்தில் ஓபிஎஸ் அணியில் பயணம் செய்தார். ஓபிஎஸ் அணி ஆதரவாளர்களை ஈபிஎஸ் அணியினர் நீக்கம் செய்வது, ஈபிஎஸ் அணி ஆதரவாளர்களை ஓபிஎஸ் அணியினர் நீக்கம் செய்வது என நீக்கம் செய்யும் படலம் நீடித்து வந்தது.
அப்போது திடீரென ஈபிஎஸ் அணிக்கு மைத்ரேயன் தாவினார். சிறிது நாட்கள் ஈபிஎஸ் அணியில் பயணம் செய்த மைத்ரேயன், போதிய முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து அவரது அணியில் ஐக்கியம் ஆகினார். கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் தரப்பினரால் மைத்ரேயன் நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் சில மாதங்கள் நடப்பதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இந்த நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா தேர்தல் தொடர்பாக டெல்லி சென்றுள்ள அண்ணாமலையும் இந்த இணைப்பு விழாவில் கலந்துக் கொள்ள இருக்கிறாராம்.
1991ஆம் ஆண்டு பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர், பொதுச்செயலாளர், துணை தலைவர், மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்தார். பின்னர் 2000ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அப்போது இருந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் மைத்ரேயன் தொடர்து செயல்பட்டு வந்தார். டெல்லியில் நடைபெறக்கூடிய அரசியல் நிகழ்வுகளை அதிமுக சார்பாக கவனித்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் பயணம் செய்தார். அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பேசப்பட்டது.
ஜெயலலிதா இருந்த காலத்தில் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயனுக்கு அவரது மறைவிற்கு பிறகு எம்.பி. பதவி மறுக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு பேர் மீதும் மைத்ரேயன் அதிருப்தியில் இருந்தார். அப்போதுதான் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இரு அணிகளிலும் மாறி மாறி பயணித்த மைத்ரேயன் தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் டெல்லி முகமாக ஜெயலலிதா காலத்தில் அறியப்பட்ட மைத்ரேயன் மீண்டும் தனது தாய் கட்சியான பாஜகவில் இணைந்த பிறகு திரைமறைவில் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சிலர் நிர்வாகிகளை பாஜகவின் பக்கம் இழுக்க முயற்சிகளை செய்வார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் எல்.முருகன்.. பாஜக நிர்வாகி வெளியிட்ட தகவல்!