டெல்லி : 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஏறத்தாழ 10 ஆண்டுகள் தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. பாட்டி விக்ரமர்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேசில் போட்டி போட்டனர். முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
தெலங்கான முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார், டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்ய முன்னாள் காங்கிரஸ் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை (டிச. 7) தெலங்கானா முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இமாச்சல பிரேதச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட சோனியா காந்தி, அதன் பின் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. அதன்பின் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி மாநிலத்தை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்! மத்திய பிரதேசத்தில் சிதைந்த பிஞ்சு குழந்தையின் கனவு!