டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட். 20) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்று (ஆகஸ்ட். 20) காலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜீவ்காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தியும், ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே லடாக் சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் தனது தந்தையின் திருவுருவப் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராஜீவ்காந்தி பிறந்தநாளை ஒட்டி இன்று பாங்காங் பகுதியில் நடைபெற உள்ள பிரார்த்தனைக் கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்காகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ராகுல்காந்தி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.
முன்னதாக இன்று (ஆகஸ்ட். 20) ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பா, இந்தியாவைப் பற்றி நீங்கள் கண்ட கனவுகள், உங்களைப் பற்றிய விலைமதிப்பற்ற நினைவுகளிலிருந்து நிரம்பி வழிகின்றன. உங்கள் வடுக்கள்தான் எனது வழி. ஒவ்வொரு இந்தியனின் போராட்டங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்வது, தாய் நாட்டின் குரலைக் கேட்பதும் என் பணி" என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜீவ்காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு தனது 40 வயதில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். தனது தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரதமராக பொறுப்பேற்று தனது கடமையை ஆற்றினார். அதன் பிறகு சில நாட்களிலேயே பொதுத் தேர்தல் நடத்தி, அதிலும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். அறிவியலும், தொழில்நுட்பமும்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்பினார். பிரதமராக திறம்பட செயலாற்றிய ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கு இன்றளவும் மர்மங்கள் நிறைந்த பேசுபொருளாகவே உள்ளது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்.. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்!