டெல்லி :நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து முத்த தலைவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டம், சீனாவின் ஊடுருவல், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் சோனிய காந்தி வியூகம் வகுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். மொத்த உள்ள 23 நாட்களில் 17 அமர்வுகளாக நாடாளுமன்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினர். நடப்பு கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து சோனியா காந்தி வியூகம் வகுத்ததாக கூறப்பட்டு உள்ளது.
பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனாவின் ஊடுருவல்கள், விலைவாசி உயர்வு, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு அமைப்பதில் இழுபறி, அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற மழைக் காலத் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்தும், காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்தும் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.