டெல்லி: காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தரும்விதமாகவும், கோவிட்-19 பரவல் காரணமாகவும் தனது பிறந்தநாள் (நாளை - டிச. 09) கொண்டாட்டம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அனைத்து பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுக்கு அறிவுறுத்துகையில்,
"கரோனா பெருந்தொற்றால் நாடே பேரிடரைச் சந்தித்துவருகிறது, அதேபோல் நாடு முழுவதும் கடுமையான வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால், சோனியா காந்தி இந்தாண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்" என்றார்.
"வீதியில் இறங்கிப் போராடிவரும் உழவர்கள் கடுமையான குளிர், அரசின் மிருகத்தனமான ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்கொண்டுவருகின்றனர். தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியினர்,பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என சோனியா கேட்டுக்கொண்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
மேலும், கே.சி. வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களிடமும், கேக் வெட்டுவது உள்ளிட்ட அனைத்துவித கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து வேளாண் சங்கங்களின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. மேலும், அக்கட்சியின் தலைமை, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உழவர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.