காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரத்தில் வசித்து வரும் முகமது என்பவர் ரியல் எஸ்டேட் முகவராக இருந்து வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அவரது தொழில் முடங்கியதால் கடன் தொல்லை அதிகரித்துவிட்டது. அதனால், தன்னிடம் இருந்த ஒரே ஒரு சொத்தான வீட்டை விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து ஒருவருக்கு வீட்டை காண்பித்து, முன்பணம் வாங்கும் நிலையில் இருந்தார். அப்போது முகமதுவின் வாழ்க்கையில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவர் முன்பணம் பெற இருந்த அரை மணி நேரத்திற்கு முன்பு, அவருக்கு கேரள லாட்டரிச் சீட்டில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர் 50 ரூபாய் கொடுத்து வாங்கிய லாட்டரி சீட்டிற்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது என செல்போனில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பு முகமதுவின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.