ஜம்மு காஷ்மீர்: ரஜோரியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டத்தின் வனப்பகுதியை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்ததால் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும், சந்தேகத்திற்கிடமான தகவலைத் தொடர்ந்து, கலக்கோட் பகுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ப்ரோ மற்றும் சூம் வனப்பகுதியை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் எல்லையை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவிடம் தகவல் தெரிவித்தார். மேலும், இரு ராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனப்பகுதிகளில் இரு பயங்கரவாதிகள் இருப்பதாக நம்பப்படுவதால் இருவரும் தப்பிச் செல்ல முயல்வதற்கான பாதைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை கண்காணிக்க கலக்கோட்டில் உள்ள பொதுப்பகுதியில் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தலைமை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு!