குல்லு: இமாச்சலப் பிரதேசத்தில் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை கடந்த 2020ஆம் ஆண்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. மணலி, லே உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை, போர்க் காலங்களில் பொது மக்களை விரைந்து வெளியேற்றவும், எல்லைகளுக்கு ராணுவ துருப்புகளை உடனடியாக கொண்டு சேர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 மாதங்கள் ரோட்டங் கணவாய் பனி மூடி காணப்படுவதால், வெளி உலக தொடர்புகளை இழந்து தவிப்பதாகவும் சுரங்கப்பாதை அமைத்து தரக் கோரியும் அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்த நிலையில் 2020ஆம் நிறைவேற்றப்பட்டது.
நடப்பாண்டு இமாச்சலப் பிரதேசத்தில் கட்டுக்கடங்காத அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அடல் சுரங்கப்பாதையில் தெற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில்களில் வழக்கத்திற்கு மாறாக பனி அதிகமாக பொழிந்துள்ளது. இதனால் பாதை தடைபட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித்தவித்து வருகின்றன.
அடல் சுரங்கப்பாதையின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவு வாயில்களில் உள்ள துண்டி நுல்லா பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இரு வழிகளிலும் ஏறத்தாழ 500 சரக்கு லாரிகள், 400 கார்கள் உள்பட வாகனங்கள் சிக்கி உள்ளதாகவும், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.