ஹைதராபாத்: இன்று நடந்த ஐநா மன்ற பொதுச்சபைக் கூட்டத்தில், பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே பேசியுள்ளார்.
அவரது உரையில், "ஐநா மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பாகிஸ்தான் குறித்து நன்கு அறியும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சியளிக்கும் கொள்கையை வைத்திருப்பது உலகறியும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து அடைக்கலம் கொடுத்த வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அண்மையில் நினைவுகூர்ந்ததை குறிப்பிட்டு, அத்தாக்குதலுக்கு பின்புலமாக இருந்த ஒசமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்தான் எனவும், இன்றளவும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒசாமா பின்லேடனை தலைவராக உருவகப்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இவரது இந்த பேச்சு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு சினேகா சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று கொண்டாடி வருகின்றனர்.
யார் இந்த சினேகா துபே?
கோவாவில் தனது பள்ளிப்படிபை முடித்த சினேகா துபே, புனே பெர்குசன் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். இறுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றார்.