நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம், நாஷிக் நகரின் சாலைகள் மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே இருப்பதால் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நாஷிக் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதனப்போராட்டம் நடைபெற்றது. நகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விமர்சிக்கும் வகையில், "ஸ்மார்ட் பிட்ஸ் கவிஞர் மாநாடு"-ஐ நடத்தினர்.
இதில், நாஷிக்கில் உள்ள கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, தங்களது எழுத்துகள், கவிதைகள் மூலம் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். கவிஞர்கள் குண்டும் குழியுமான சாலைகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் குறித்தும் கேலியாகவும், நையாண்டிகளாகவும் கவிதைகள் எழுதி, வாசித்துக் காட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது... 4 பேருக்கு போலீஸ் வலை...