கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரின் ஜகதீஷ்பூரில் வீட்டின் செப்டிக் டேங்கில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியின் போது எலும்புக்கூடு சிக்கியது. அதே பகுதியில் 2013ஆம் ஆண்டு காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.
ஜகதீஷ்பூரில் உள்ள ஒரு வீட்டை சஞ்சித் சர்க்கார் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 2) செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஆட்களை வரவழைத்துள்ளார். இந்த சுத்தம் செய்யும் பணியின்போது பெண்ணின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
அதனால் சந்தேகமடைந்த வேலை ஆட்கள் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சஞ்சித் சர்க்கார் தொடர்ந்து சுத்தம் செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதன்பின் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் நரேந்திராபூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மண்டை ஓடு உள்பட எலும்புகளை மீட்டனர். அதன்பின் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளரின் மனைவி பாயல் சர்க்கார் கூறுகையில், இந்த வீட்டை எனது கணவர் சஞ்சித் சர்க்கார் 5 ஆண்டுகளுக்கு முன்பே விலைக்கு வாங்கினார்.